×

பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக 25லட்ச ரூபாய் மோசடி செய்த பாஜ பிரமுகர்கள் மீது வழக்கு: பெண் நிர்வாகி புகாரால் பரபரப்பு

திருவொற்றியூர்: பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் வளர்மதி(33). இவர் மணலி புதுநகர் பாஜக 16வது வட்ட மகளிர் அணி பொருளாளராக இருக்கிறார். மேலும் இவர் அம்பத்தூரில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வருகிகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அம்பத்தூர், போரூரில் ஸ்பா, பியூட்டி பார்லர் நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்கித் தருவதாக வெள்ளிவாயல்சாவடியை சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட பொது செயலாளரான பொன்.பாஸ்கர் 25 லட்ச ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி லைசென்ஸ் வாங்கி தராததுடன் அவர் கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. தான் கொடுத்த பணத்தை தரும்படி பலமுறை வளர்மதி கேட்டபோது பாஸ்கர் மற்றும் பாஜக நிர்வாகி முத்துராஜ், பாஜ மாவட்ட தலைவர் செந்தில்குமார், பாஜ அரசு பிரிவு தொடர்பு மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் வளர்மதியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக வளர்மதி மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி தமிழக பாஜக தலைமைக்கும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பதவியில் இருந்து செந்தில்குமாரை பாஜக தலைமை நீக்கியுள்ளது. இதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் செந்தில்குமாருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வளர்மதியிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதுடன் பொன்.பாஸ்கர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து வளர்மதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வளர்மதி மீண்டும் பாஜக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வளர்மதி, கடந்தவாரம் ஆவடி காவல்ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ‘’ தனக்கு கொலை மிரட்டல் விடுத்த பொன்.பாஸ்கர், அரசு தொடர்பு தலைவர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், முத்துராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது பணம் ரூ.25 லட்சத்தை மீட்டு தரவேண்டும். ஏற்கனவே 2 முறை மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்படி, மணலி புதுநகர் காவல் நிலையத்தில் பாஜ நிர்வாகிகள் பொன்.பாஸ்கர், முத்துராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் எம்.பாஸ்கரன் மற்றும் கார்த்திக்ராஜ், சிவபிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் மீது அவதூறாக பேசுதல், மோசடி, கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை என 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

The post பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக 25லட்ச ரூபாய் மோசடி செய்த பாஜ பிரமுகர்கள் மீது வழக்கு: பெண் நிர்வாகி புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruvottiyur ,Manali Pudunagari ,Chennai ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...